• Fri. Apr 18th, 2025

மருதமலை கோவிலுக்கு மலைப்பாதை வழியாக காரில் செல்ல தடை

Byவிஷா

Apr 9, 2025

மருதமலை முருகன் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக காரில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் ஆறு படை வீடுகள் எவ்வளவு புகழ் பெற்றதோ, மருதமலை முருகன் கோவிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயிலை முருகப் பெருமானின் 7-வது படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 4ஆம் தேதி கோலகலமாக நடைபெற்றது.
இதையடுத்து, மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. தினமும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. இதில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனை, வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த மண்டல பூஜை மொத்தம் 48 நாட்கள் நடைபெறும். இதையடுத்து, பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு என தொடர்ந்து விஷேச நாட்கள் வருவதால், பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாளை (ஏப்ரல் 10) முதல் 14ஆம் தேதி வரை மலைப்பாதை வழியாக 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 2 சக்கர வாகனங்கள் மூலமாகவும், படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் மூலமாகவும் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.