“நீங்க மேலே படிங்கம்மா… யாருமில்லை நினைக்காதீங்க”… லட்ச ரூபாய் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..!
சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் இல்லத்தில் தங்கி படித்து வருபவர் மாணவி காயத்ரி. தாயை இழந்த இந்த மாணவிக்கு உறவினர்கள் இல்லாத நிலையில், உயர் கல்வி படிக்க வசதி இல்லாமல் இருந்தார். இந்நிலையில் தொண்டு நிறுவனத்திற்கு ஏழை,எளிய மாணவிகளுக்கு அன்னதானம் வழங்க வந்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியிடம் தனது உயர் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாணவி காயத்திரியின் மேல்படிப்பிற்காக ரூ.1 லட்சம் ரூபாயை மாணவி காயத்ரியிடம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொண்டு நிறுவன நிர்வாகி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி காயத்ரி,.,
“கடந்த ஆண்டு முதுகலை பட்டப்படிப்பை முடித்த எனக்கு, பிஎட் படிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த எனக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், காப்பகத்திற்கு வருகை தந்த கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் தன்னுடைய குறைகளை எடுத்துரைத்தேன். அதனைத் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு ஆகும் படிப்பு செலவை அவரே வழங்கினார்.
ஆசிரியருக்கு படித்துவிட்டு வருங்கால இளைஞர்களை உருவாக்குவதே எனது லட்சியம், மேலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி சேவை செய்வேன். இந்த நிதியுதவி என்பது, செய்வதறியாது தவித்த நேரத்தில் கிடைத்த பரிசு போன்று உள்ளது என்று மாணவி நெகிழ்ச்சியாக காயத்ரி தெரிவித்தார்.