• Sat. Apr 27th, 2024

தமிழரின் தேசப்பற்றுக்கு பிரதமர் சர்டிஃபிகேட் தர வேண்டாம்..

நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது கிடையாது…
தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்க தேவையில்லை. அதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்… அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

தன்னுடைய ஒவ்வொரு பிரச்சார உரைகளிலும், தமிழர்களின் நலனை எடுத்து கூறுவதுடன், அதிமுக, பாஜகவினால் தமிழகத்துக்கு கிடைத்த அதிருப்திகளை பட்டியலிட்டும் வருகிறார். முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “திமுக அரசின் ஆட்சியை தென் மாநில ஊடகங்கள் மட்டுமல்லாது, வட மாநில ஊடகங்களும் பாராட்டி வருகின்றன. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை விட தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வருவதுதான் என்னுடைய லட்சியம்.. அதிமுக ஆட்சியை போல் கணக்கு காட்டுவதற்காக இல்லாமல், திமுக அரசு ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெறப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. வீரமங்கை வேலுநாச்சியாரையும், வஉசியையும் பாரதியையும் டெல்லி குடியரசு தின விழா ஊர்தி அணிவகுப்பில் அனுமதிக்க மறுத்தார்கள்… அதனாலென்ன? எங்கள் தமிழ்நாட்டு வீதிகள்தோறும் அவர்கள் வலம் வரட்டும் என்று அந்த அலங்கார ஊர்தியை விடுதலை போராட்ட எழுச்சியோடு அனுப்பினோம்..
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மக்களுக்குச் சாப்பிட ரொட்டி கிடைக்கவில்லை என்ற போது, கேக் வாங்கிச் சாப்பிடட்டும் என்று ஒரு ராணி சொன்னாரே, அதுமாதிரி, “துப்பாக்கிச்சூடு குறித்து நான் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என்று சொன்னவர் சர்வாதிகாரி அல்லவா?

இந்த ஆட்சி மலர்ந்த இந்த 8 மாத காலத்தில் இதுவரை 5 அனைத்து கட்சிக் கூட்டத்தை இந்த அரசு நடத்தி இருக்கிறது… சட்டமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்தான் அதிக நேரம் பேசுகிறார்களே.. இதை விட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும்? என்னைச் சர்வாதிகாரி என்று சொல்லிய பழனிசாமி, நான் பொம்மை என்றும் இதற்கு முன்பு சொல்லி இருக்கிறார். மக்கள் கொடுத்த தோல்வியில் என்ன பேசுவது என்றே தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருக்கிறார்..

அதிமுக ஆட்சியின்போது பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார் ஸ்டாலின், இப்போது 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று சொல்லி வருகிறார்.. நான் 5 ஆயிரம் கொடுக்கச் சொன்னது, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரண நிதியாகத்தான் கொடுக்க சொன்னேன். திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டோம்… ஆனாலும் திசை திருப்பும் பொய்களை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் பச்சை பொய் பழனிசாமி.

நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, 110-ன் கீழான அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் இந்த 8 மாதங்களில் வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு விட்டன.. எங்களைக் குறை சொல்வதற்கு எதுவும் கிடைக்காதவர்கள் இந்து சமய அறநிலையத் துறையைப் பற்றி தேவையற்ற வதந்திகளைக் கிளப்பி வருகிறார்கள்.

மதத்தை வைத்தோ, சாதியை வைத்தோ அரசியல் செய்யவில்லை. இது எதையும் பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, “யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை” என்பார்கள். அதைப் போல இந்த 2 யோக்கியர்களைப் பற்றியும் நாட்டுக்குத் தெரியும். இவர்கள் ஆட்சி நடத்திய முறையைப் பற்றியும் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *