
வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் அறிவிப்பு.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுக கால கடன்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்துள்ளார். குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4% ஆக தொடரும் என்றும் கூறியுள்ளார்.
பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதேபோல், ரிசர்வ் வங்கியில், வங்கிகள் செய்யும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ) 3.35% ஆகவே தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், வீடு, கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையிலேயே இருக்கும் என்றும் மும்பையில் வல்லுநர்கள் குழு ஆலோசனை நடத்திய பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இதனை தெரிவித்துள்ளார். 2021-22 நிதியாண்டில் CPI பணவீக்கம் 5.3% ஆகவும், 2022-23 நிதியாண்டில் 4.5% ஆகவும் உள்ளது.
உணவு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச நிதியத்தின் (IMF) கணிப்பின்படி உலகிலேயே அதிக வேகத்தில் வளரும் பொருளாதாரம் இந்தியாதான். 2022-23-ல் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5% இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
