

கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதில் என்ன தவறு..? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே தமிழக அரசு சார்பில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்று, நடுக்கடலில் 134 அடி உயரத்திற்கு கருணாநிதிக்கு பேனா வடிவில் ரூ.80 கோடியில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மெரினா கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதில் எந்த தவறும் இல்லை. கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம். கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவு சின்னம் அமைத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுபவர்களின் டிஎன்ஏவை (மரபணுவை) பரிசோதிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குள்ளான கருத்ததை தெரிவித்தார்.
