மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க-வினர், செய்தியாளர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 11:30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. .கூட்டத்தில் வார்டு எண் வாரியாக உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், அதிமுக உறுப்பினர்கள் 15 பேருக்கு மட்டும் தனியாக இருக்கை ஒதுக்கி தருமாறு கோரிக்கைக்கு பலன் இல்லாத நிலையில், இன்று காலை அவர்களாகவே 15 இருக்கைகளை தேர்வு செய்து வரிசையாக அமர்ந்து கொண்டனர்.இதனால், திமுக – அதிமுக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக உறுப்பினர் ஒருவர் அதிமுக உறுப்பினர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் மீது ஏறி நின்று வாக்குவாதம் செய்தார் .
அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மேயர் இந்திராணியின் அறைக்கு சென்று நேரில் புகார் அளித்தனர். புகார் அளிக்க சென்ற அதிமுக உறுப்பினர்களை பின்தொடர்ந்து சென்ற செய்தியாளர்களை, மேயர் அறை முன்பாக இருந்த தி.மு.க-வினர் இழிவாகப் பேசி கீழே தள்ளி தாக்குதல் நடத்தினர், கேமராக்களை காலால் எட்டி உதைத்தனர்.
தி.மு.க-வினரின் இந்த செயலைக் கண்டித்து செய்தியாளர்கள் அனைவரும் மேயர் அறை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப்பிறகு மேயர் தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மேயரை கூட்ட அரங்குக்கு அழைத்து சென்றனர்.செய்தியாளர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்திருக்கிறார். மதுரை மாநகராட்சியில் ஏற்பட்டஇச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க-வினர்
