• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மாதாந்திர மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்றுமா திமுக – ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

Byமதி

Dec 19, 2021

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ”இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்கும் வகையில் மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் இரண்டு மாதங்களுக்கு ஆயிரம் யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரையில் பயன் பெறுவர் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரப்பட்டது. இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களை வஞ்சிப்பதுபோல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பேச்சு அமைந்துள்ளது.

அண்மையில், புதுடெல்லியில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் 80 விழுக்காடு மூலதனச் செலவுக்கான கடனை அளிக்கும் மத்திய நிதி நிறுவனங்களான மின்விசை நிதி நிறுவனம், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், இந்திய புதுப்பிக்கக்கூடிய மின் மேம்பாட்டு முகமை ஆகியவை கடனுக்கான வட்டியை குறைத்துக் கொள்வது மற்றும் 2021-ம் ஆண்டு மின்சார திருத்தச் சட்டமுன்வடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்துவிட்டு வெளியில் வந்து- செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் ,
“உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார். இதனுடைய உள்ளார்ந்த பொருள், நீட் தேர்வு ரத்து, ஏழு பேர் விடுதலை, கல்விக் கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் போல் இதுவும் குழிதோண்டி புதைக்கப்படும் என்பதுதான்.

ஒரு மாநிலத்தினுடைய மின் துறையின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது என்பது அந்த மாநிலத்தில் பெருகிவரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக மின் உற்பத்தி நிறுவு திறனை ஏற்படுத்த ஏதுவாக அனல் மின் திட்டங்கள், நீர் மின் திட்டங்களை புதிதாக செயல்படுத்துவது, அனல் மின் திட்டங்களுக்குத் தேவையான நிலக்கரியை நிரந்தரமாகக் கொள்முதல் செய்ய வழிவகை செய்வது, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் சமுதாயத்தினை பாதிக்காத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் ஊக்குவிப்பது, மின் தொடரமைப்பை தொடர்ந்து மேம்படுத்துவது, துணை மின் நிலையங்கள் மற்றும் மின் பாதையை தொடர்ச்சியாக அமைப்பது, விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்குப் பதிலாக பூமிக்கு அடியில் கம்பிவடம் அமைப்பது, மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துவது, மின் கட்டமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் குறைந்த மின் அழுத்த விநியோக அமைப்பை உயர் மின் அழுத்த விநியோக அமைப்பாக மாற்றுவது, மின் மாற்றிகளை மாற்றியமைப்பது, கம்பிவடம் மாற்றுவது, நவீன மீட்டர் பொருத்துவது என பல காரணிகளை உள்ளடக்கிய தொடர் பணிகளாகும்.

இந்தப் பணி ஒரு தொடர் சங்கிலிப் போல காலத்திற்கேற்ப, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, தேவைக்கேற்ப தொடர்ந்து கொண்டேயிருக்கும். உட்கட்டமைப்பு பணிகள் எப்போது முடிந்து இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்பதற்கு ஏதாவது கால அளவு இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை. அமைச்சர் ஏதாவது கால அளவை குறிப்பிட்டு இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. அமைச்சரின் பேச்சு போகாத ஊருக்கு வழி சொல்வது போல அமைந்திருக்கிறது.

எனவே, உள்கட்டமைப்புகள் – பலப்படுத்தப்பட்ட பின் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்பது இந்த வாக்குறுதி ‘அதோகதி’ என்பது சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வாக்குறுதியையும் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையைத்தான் தி.மு.க. அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அ.தி.மு.க. முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா கொடுந்தொற்று, விஷம் போல் எறும் விலைவாசி, வேலையின்மை, ஊதிய உயர்வின்மை என பலப் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ‘மாதாந்திர மின் கணக்கீடு’ என்ற வாக்குறுதியையாவது இந்த அரசு செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அறிக்கையில் ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.