சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 5க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளுக்கு மாநகராட்சி திட்ட அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர் ஸ்ரீநிகா அமளியில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட
திமுக மாமன்ற உறுப்பினர் ஜெயினுலாபூதின் ஸ்ரீநிகா முன்பாக இருந்த மேஜையை கீழே தள்ளிவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சரவணகுமார், மதிமுக கவுன்சிலர் ராஜேஷ் ஆகியோரும் சேர்ந்து திமுக பெண் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீநிகாவுடன் கடுமையான வாக்குவாதம் செய்தனர். இந்த சம்பவம் அன்றைய தினம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தன்னை அவதூறாக பேசி தாக்க முயன்றதாக இரண்டு திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதிமுக மாமன்ற உறுப்பினர் என மூன்று பேர் மீது திமுக மாமன்ற உறுப்பினர் ஸ்ரீநிகா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அவர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய மாநில மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு பரிந்துரைத்ததன் பேரின் 6 மாதம் கழித்து தற்போது திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஜெயினுலாபூதின், சரவணன், மதிமுக மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஆகிய மூன்று பேர் மீதுபெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தகராறில் ஈடுபடுவதாக திமுக மாமன்ற உறுப்பினர் ஜெயினுலாபூதின் அளித்த புகாரின் பேரில் பெண் கவுன்சிலர் ஸ்ரீநிகா மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.