கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 6000 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று திமுக அரசு புத்தாண்டு பரிசு வழங்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 6000 செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று திமுக அரசு புத்தாண்டு பரிசு வழங்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று நம்மை ஆட்டிப்படைத்த காலத்தில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தொய்வின்றி உழைத்து நோய் தொற்று உள்ளவர்கள் குணமடைய அயராது பாடுபட்டவர்களில் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி செய்ய செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் 14 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்திற்கு சுமார் 6000 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை 2020-ம் ஆண்டு வழங்கப்பட்டது. 6 மாத காலத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கான ஆணை கொரோனா தொற்று பெருகிவந்த காரணத்தால், 31-12-2022 வரையில் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 356ல், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. இதற்குமுன் பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம் நடத்தியபோது, பணி நிரந்தரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்று தமிழக முதல்வர் கூறினார். புத்தாண்டு தினத்தன்று பணி நிரந்தர ஆணை வரும் என்று எதிர்பார்த்திருந்த 6000 செவிலியர்களுக்கு இடியாக வந்து இறங்கியது சுகாதாரத்துறையின் அரசாணை 31.12.2022க்கு பிறகு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றுவார்களா என்ன? தங்கள் உயிரை துச்சமாக கருதி பணிசெய்த செவிலியர்களுக்கு திறனற்ற திமுக அரசு கொடுத்த புத்தாண்டு பரிசை பாருங்கள். உடனடியாக 6000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்பட வேண்டும். தவறினால், அவர்களுக்காக தமிழக பாஜக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.