• Wed. May 8th, 2024

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு: துரைமுருகன் அறிக்கை

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவினை வழங்குகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வழிவகை செய்யும் ‘வங்கிகள் சட்டத் திருத்த மசோதா’ கொண்டு வரும் மத்திய பாஜக அரசின் செயலைக் கண்டித்து 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய நாட்களில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செய்யும் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.

வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தங்கள் தரப்பின் நியாயங்களை திமுக தலைவரை சந்தித்து எடுத்துக்கூறினர். இதனைக் கருத்தில்கொண்டு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திமுக தனது முழு ஆதரவினை வழங்குகிறது.

கடன் பெற்ற விவசாயிகள், சுயதொழில் செய்யும் மகளிர், கல்விக்கடன் பெற்ற மாணவர்களிடம் மனித உரிமைகளை மீறும் மிக மோசமான நடவடிக்கைகள் மூலம் கடன்களை வசூலிக்கத் துடிக்கும் வங்கி நிர்வாகங்கள் – பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிப்பதில் காட்டுவதில்லை.

உழைத்துச் சம்பாதித்துப் பொதுத்துறை வங்கிகளில் போட்டுள்ள சேமிப்புகளைக் கூட சுரண்டுவதற்கு ஏதுவாக இதுபோன்ற வங்கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிவிட மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதச் செயலாகும்.

நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையாகத் திகழும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முடிவினையும் – அதுதொடர்பாக அவசர அவசரமாகக் கொண்டுவரும் வங்கிச் சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து 9 இலட்சம் வங்கி ஊழியர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *