• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகள்: ஈ.பி.எஸ் கண்டனம்

Byவிஷா

Feb 26, 2024

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளே ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானது என்று அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
“போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது, வேதனையானது! இந்நிலையில் முன்னாள் காவல்துறை தலைவர் ‘ஆபரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0, 4.0’ என்று போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்று கூறிய நிலையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்று 32 மாத கால ஆட்சிக்குப் பிறகும், இதுபோன்ற போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது, போதைப் பொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் மட்டும் வருகின்றன. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருவதையும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பொம்மை முதலமைச்சரின் கீழ் செயல்படும் தமிழக காவல்துறை தோல்வி அடைந்ததையே இது காட்டுகிறது.
இதற்கு காரணம், இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தி.மு.க.- வின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் தலையீடு உள்ளதாக அவ்வப்போது வரும் நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகளில் இருந்தே தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படாத நிலையை ஊகிக்க முடிகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக நேற்று (பிப்.25), டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும், இக்கடத்தலில் தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளதாக, ஊடகங்கள் முக்கியச் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.
மேலும், தலைமறைவாகி உள்ள மூன்று பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வரும் நிலையில், தி.மு.க.-வைச் சேர்ந்த பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின் அவர்களது மனைவி ‘கிருத்திகா உதயநிதி’ இயக்கத்தில் இம்மாதம் வெளியான ‘மங்கைTravel of Women ’ என்ற படத்தைத் தயாரித்தவர் இந்த ஜாபர் சாதிக் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக தள்ளாடி வரும் நிலையில், தி.மு.க.-வால் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கப்பட்ட முக்கிய நிர்வாகி, டெல்லியில் போதை சாம்ராஜ்யம் நடத்தியுள்ளதும், அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயில் யாருக்கெல்லாம் பங்கு கொடுத்தார் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்தத் தலைமை நிர்வாகி, தி.மு.க. தலைமை குடும்பத்துடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகளிடம், தான் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக இந்ந நபரின் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.