• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

திமுக மாசெக்கள் கூட்டம்: தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்!

முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆகஸ்டு 13) அறிவாலயத்தில் நடந்தது.

நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள “வாக்குத்திருட்டு” மற்றும் “SIR” சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைகளுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு…

தீர்மானம் 1

தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் – அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையிலும், உச்சநீதிமன்றமே “Mass deletion” இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும் அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை, சொத்தை காரணங்களை மேற்கோள்காட்டி தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தேர்தல் களத்தின் சம நிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு தேர்தல் களத்தில் பா.ஜ.க.வின் “வாக்குத் திருட்டை” எதிர்த்தும் தேர்தல் ஆணையம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களைத் தடுத்து நிறுத்திய – அவர்கள் மீது FIR பதிவு செய்து,

கைது நடவடிக்கை மேற்கொண்டு ஆணவப் போக்கை கடைப்பிடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளை எதிர்த்து  இம்மாவட்டச்  செயலாளர்கள் கூட்டம்  கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 தீர்மானம்  : 2

திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துள்ள கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.

தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்ட பிறகு – தேர்தல் நடத்துவதில் மட்டுமல்ல, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதிலும் தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக் கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுடன் கைகோத்து நிற்பதும் – பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகளுக்குத் துணை போவதும் ஜனநாயகத்தைக் கேள்விக்குரியதாக ஆக்குவதோடு கேலிக்குரியதாகவும் மாற்றி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுத்துவருகிறது திமுக.

முதல்வரின் ஆணைக்கு இணங்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 17.7.2025 அன்றே இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து “இறந்த வாக்காளர்களை நீக்குதல்” “BLO-க்கள் மற்றும் BLA-க்களுடன் ஒருங்கிணைப்பு” “பிராந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் தொகுப்புக் கையேடுகளை வழங்குதல்” “அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்களை அகற்றுதல்”, “ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வசிப்பிட இடம் மற்றும் பிறந்த தேதியை நிரூபிக்கும் ஆவணங்களாக ஆக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட மிக முக்கியமான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து விரிவான மனு ஒன்றை அளித்துள்ளதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பதிவு செய்யும் வேளையில் – தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளைத் தொடங்கும் முன்பே சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியைத்  தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும்.  

 தீர்மானம்  : 3

ஓரணியில் தமிழ்நாடு’ முழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்க வைத்து – உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!

ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதலமைச்சர் அவர்களின் தலைமைக்கு பள்ளி மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஒரு புறமும், பள்ளி மாணவிகள் முதல் இல்லத்தரசிகள் வரை இன்னொரு புறமும் முழுமையான ஆதரவுக் கரம் நீட்டுவதால் – மாணவர், இளைஞர், பெண்கள், முதியோர் என அத்தனை தரப்பு மக்களின் அன்பையும் பெற்றுத் திகழ்கிறார் நமது கழகத் தலைவர் என்பதை ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களிடம் கிடைத்த வரவேற்பின் மூலமாக உணர முடிந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் குவிந்துள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை – இப்போது மட்டுமல்ல –  வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் – ஏன் தமிழ்நாட்டில் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகமே முதன்மை சக்தி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதோடு மட்டுமல்ல – மதவெறி சக்திகளுக்கும் – அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வோருக்கும் இங்கே மார்க்கெட் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியுள்ளது.

இத்தகைய சாதனைக்குத் திட்டமிட்டதுடன், ஒவ்வொரு நாளும் கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் நிலவரத்தைக் கேட்டறிந்து ஊக்கப்படுத்தி, ஆலோசனை வழங்கும் முதலமைச்சர் அவர்களின் அன்பான ஆணைக்கிணங்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து – உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர்கள், பாக டிஜிட்டல்  முகவர்கள், வீடுவீடாகச் சென்ற கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது நன்றியையும் -பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

 ஆகிய தீர்மானங்கள்  மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன