

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கான மாநிலங்களவைத் தேர்தல் செப்.13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இப்பதவிக்குத் திமுக வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்தவரும், வெளிநாடுவாழ் தமிழர் நல அணி இணை செயலாளருமான எம்.எம்.அப்துல்லாவை கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.எம்.அப்துல்லா. எம்பிஏ படித்துள்ள இவர், குடும்பத்தினரோடு புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகே வசித்து வருகிறார். 1993-ல் திமுக நகர் மாணவர் அணி துணை அமைப்பாளராகச் சேர்ந்த இவர், பின்னர், 1996-ல் நகர அமைப்பாளர், 2001-ல் கிளைச் செயலாளர், 2008-ல் பொதுக்குழு உறுப்பினர், 2014-ல் சிறுபான்மையினர் அணி மாநிலத் துணைச் செயலாளர், 2018-ல் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் போன்ற பணிகளில் இருந்தார். தற்போது, வெளிநாடு வாழ் தமிழர் நல அணி இணைச் செயலாளராக உள்ளார்.
இதுதவிர, கட்சியின் அமைப்பு தேர்தல் தொடர்பாகப் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆணையாளராகவும், பூத் கமிட்டி ஆய்வு உள்ளிட்ட கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2004-ல் இருந்து, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தார். எனினும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவரை மாநிலங்களவை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேரவை செயலாளரிடம் திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா வேட்புமனு அளித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழகத்தில் இருந்து முதல் நபராக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
