கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானை நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளை, கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 13ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது, காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயனை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கோத்தகிரி அல்லது உதகை காவல் நிலையத்தில் நாளை விசாரணை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சயான் கொடுத்த வாக்குமூலத்தில் எடப்பாடி தான் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நாளை சயான் விசாரணைக்கு ஆஜராவது எடப்பாடி தலைக்கு மேல் தொங்கும் கத்தியின் நிலையை தீர்மானிக்கும் விதமாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.