தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ- ஆப்டெக்ஸ் கடந்த 91 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ- ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி
பேருதவி புரிந்து வருகிறது.

புதுக்கோட்டை, முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி-2026 சிறப்பு தள்ளுபடி மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா, அவர்கள் தலைமையில் முதல் விற்பனை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ், மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எண் சுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள் . கோ -ஆப் டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருப்புவனம், போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் வேஷ்டி, லுங்கி, துண்டு, இரகங்கள் பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட், மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை முக்கனி விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 இல் ரூபாய் 20.07 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி 2026க்கு ரூ- 50 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கோ -ஆப் டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி 11 மாதங்கள் சந்தா தொகை வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டு 12வது மாத சந்தா தொகையை க கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. மின் வணிக விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப இரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இவ்விழாவில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், மேலாளர், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி(பொறுப்பு) சு.வைரமுத்து , புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ஐ.ராஜ்முகமது, மற்றும் அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



