விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள காரியாபட்டி காவல் நிலையம் கடந்த 1868 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, பின்பு தற்போது உள்ள புதிய கட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் இக்காவல் நிலையம் இயங்கி வருகிறது. மேலும் கடந்த 1997 ஆம் ஆண்டு மல்லாங்கிணறு காவல் நிலையம் தொடங்கப்பட்டு, தற்போது உள்ள புதிய கட்டத்தில் 2009ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை செய்து வரும் சிறந்த காவல் நிலையங்களுக்கு இந்திய தர கவுன்சில் இந்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டுக்காக சர்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டி காவல் நிலையங்களை ஆய்வு செய்து மிகவும் மதிப்புமிக்க ஐ.எஸ்.ஓ 9001:2015 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி தரக்கட்டுபாட்டு நிறுவனம் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு காவல் நிலையங்களை ஆய்வு செய்து பொதுமக்களுக்கான வசதி ஆவணங்கள் பராமரிப்பு, வழக்கு விசாரணை ஆகியவை சிறந்து முறையில் பராமரிக்கப்பட்டு வருவதால், மேற்படி இரு காவல் நிலையங்களையும், இந்திய தர கவுன்சில் இந்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டுக்காக சர்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்க தேர்வு செய்தது. ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி காரியாபட்டி காவல் நிலைய வளாகத்தில் நடை பெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்தார். அருப்புக்கோட்ட உட்கோட்ட காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் காயத்ரி முன்னிலை வகித்தார். காரியாபட்டி இன்ஸ் பெக்டர் செந்தில் குமார் வரவேற்றார். இந்திய அரசு தர கவுன்சில், முதன்மை இயக்குநர் கார்த்திகேயன், காரியாபட்டி – மல்லாங்கிணறு காவல்நிலையங்களுக்கான ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லாவிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசும் போது, சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு காவல் நிலையங்களின செயல்பாடு களை கண்டறிந்து ஐ.எஸ்.ஓ. 9001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை பெருமையாக கருதுகிறோம். மேலும் இச்சான்றிதழ் பெறுவதற்காக பாடுபட்ட காவல்நிலை அதிகாரிகள், காவலர்கள் , ஊர் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன. இது போன்று மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல்நிலையமும் சிறப்பாக செயல்பட்டு நல்ல முறையில் பராமரித்த பொதுமக்களிடையே நல்லுறவு பேண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் காரியாபட்டி காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் அசோக்குமார், மல்லாங்கிணர் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ் குமார், பேரூராட்சி தலைவர் செந்தில், காரியாபட்டி ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன். எஸ்.பி.எம் நிறுவன தலைவர் அழகர்சாமி, சுரபி நிறுவன தலைவர் விக்டர் மற்றும் காவல்நிலைய சார்பு ஆய்வாளாகள் பங்கேற்றனர்.
