• Wed. Sep 27th, 2023

நீங்கள் உடற்பயிற்சி செய்வதை பார்க்கவா மக்கள் வாக்களித்தனர்? – எடப்பாடி பாய்ச்சல்

நீங்கள் உடற்பயிற்சி செய்வதை பார்க்கவா மக்கள் வாக்களித்தனர்? என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரசாரம் மாநிலம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

இந்திய நாட்டிலேயே சிறப்பாக செயல்படும் முதன்மை முதலமைச்சர் என்று, தன்னைத் தானே மு.க.ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் ஆனது முதல் தற்போது வரை என்ன செய்தீர்களை என்பதை சொல்ல முடியுமா?

பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் மு.க.ஸ்டாலினை உயர்த்திப் பிடிக்கின்றன. கடந்த 9 மாதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் செய்கிறார். ஈ.சி.ஆர்.ரோட்டில் சைக்கிளில் போகிறார். பிரமாண்டமாக போய்க் கொண்டிருக்கிறார். டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார். நடைபயணம் மேற்கொள்கிறார். ஜிம்முக்கு சென்று உடற் பயிற்சி செய்கிறார். இதெல்லாம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. இவை நல்லதுதான். ஆனால் நீங்கள் செய்வதையெல்லாம் எதற்காக டிவியில் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் உடற்பயிற்சி செய்வதை பார்க்கத்தானா மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்? நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது.

ஒரு முதலமைச்சர் என்றால் 234 தொகுதியில் இருக்கிற மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். அதை உடனுக்குடன் செய்து முடித்தால்தான் மக்களுக்கு பலன் ஏற்படும். அவ்வாறு எனது ஆட்சியில் மக்கள் பிரச்னை தொடர்பான எந்த ஃபைலும் நிலுவையில் வைக்கப்படவில்லை. உடனுக்குடன் கையெழுத்திடப்பட்டு பிரச்னைகள் தீர்க்கப்பட்டன.

நீட் தேர்வை அதிமுகதான் கொண்டு வந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இது தொடர்பாக விவாதிக்க தயாரா என்று அவர் சவால் விடுத்துள்ளார். இதை நான் ஏற்கிறேன். ஆனால் துண்டுச் சீட்டு ஏதும் இல்லாமல் அவர் பங்கேற்க வேண்டும்.

கிராமப்புற மாணவர்கள், ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியவில்லை. அதனால் மருத்துவக் கல்வி கற்க முடியவில்லை. 2010-ல் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *