
தமிழ் திரைத்துறையில் சிறந்து விளங்கும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ஜான் விஜய். கபாலி, சார்பட்டா பரம்பரை, கோ, நேரம், ஓரம்போ மௌனகுரு, விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.. ஜான் விஜய் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தான் ரஜினிக்கு ஒரு கதை சொன்னதாக சொல்லி இருக்கிறார். மேலும் நாசர் தன்னிடம் ஒரு முறை, “நல்ல கதை எழுதி அதை இயக்கி அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடி என்றார்” என பதிவு செய்துள்ளார். இதனால் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் படைப்பாளியாக அடுத்த கட்டத்திற்கு நீ செல்வாய் என தன்னிடம் சொன்னதாகவும் அந்த பேட்டியில் ஜான் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்தபின், பாபா படத்திற்கு முன்பு ரஜினியை சந்தித்து தான் ஒரு கதை சொன்னதாகவும் ரஜினி சமீபத்தில் அதைப் பற்றி என்னிடம் விசாரித்ததாகவும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.