• Mon. May 20th, 2024

எட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து

Byவிஷா

May 10, 2024

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருவதன் காரணமாக எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தோடு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் கேபின் குழு ஊழியர்களுக்கும், ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கேரளா உட்பட சிலமாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் குழு ஊழியர்கள் திடீர் விடுப்புகள் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளர்கள் இல்லாத காரணத்தால், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருவனந்தபுரம் புறப்பட்டு செல்லும் 2 விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. மற்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று 2-வது நாளாக, சென்னை விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானநிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் பலர் திடீர் விடுப்பு எடுத்துவிட்டு பணிக்கு வராத காரணத்தால், விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளர்கள் இல்லாமல், மொத்தம் 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல திருவனந்தபுரம், கொல்கத்தாவில் இருந்து சென்னை வர வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொல்கத்தா மற்றும் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் நேற்று பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *