• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி கோயிலில் கல்தூண் அலங்கார பகுதி உடைந்து விழுந்ததில் பக்தர்கள் அதிர்ச்சி..!

ByKalamegam Viswanathan

May 27, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதி பிரகாரத்தில் உள்ள கல்தூண் ஒன்றின் மேல்பக்க அலங்கார பகுதி உடைந்து விழுந்தது குறித்து கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

இக்கோயிலில் கும்பாபிஷேகம் இவ்வாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நடக்கிறது. இதற்காக திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.கோயில் பிரகாரங்களில் உள்ள சிறிய சன்னதிகளின் திருப்பணிகளும் நடந்து வருகின்றன. முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் பிரகாரத்தில், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அருகேயுள்ள கல்தூண் ஒன்றின் அலங்கார போதிகை (தூணையும், மேல்தளத்தையும் தாங்கும் வேலைப்பாடு உடைய பகுதி) உடைந்து விழுந்தது.

அச்சமயத்தில் அப்பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை. கோயில் ஊழியர்கள் உடனடியாக அப்பகுதியை தூய்மைப்படுத்தினர்.
​இதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரக்கட்டு மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது பழமையின் காரணமாக உடைந்து விழுந்ததா என்பது குறித்து கோயில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.