• Mon. Jan 20th, 2025

மழை எதிரொலியாக சதுரகிரி செல்ல 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை

Byவிஷா

May 20, 2024

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கும், கோவிலில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.நடப்பாண்டில் இந்நிலையில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு 21ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.