• Sat. Apr 27th, 2024

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு பக்தர்கள் அனுமதி

Byமதி

Nov 18, 2021

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போது கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும், இந்து சமய அறநிலையத்துறையும் இந்து மதத்தின் வளர்ச்சிப் பணிகளை செய்யாமல் எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீபத்திருவிழாவில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவம், காவல், தீயணைப்பு, மின்சாரம், குடிநீர் போன்ற உரிய ஏற்பாடுகளுடனும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடனும் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என நவம்பர் 6ல் அளித்த மனுவை முறையாக பரிசீலித்து முடிவெடுக்க அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி நேற்று வரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், தீபத் திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கு மேலானவர்கள் வருவார்கள், 3 லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தார். மூன்று நாட்களுக்கு உள்ளூரை சேர்ந்த 3 ஆயிரம், வெளியூரை சேர்ந்த 7 ஆயிரம் பேரை அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் பின்பற்றுவதாக தெரிவித்தார்.

ஆனால் 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் அரசு தரப்பில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம் என்றும், இன்றும் நாளையும் கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என தெரிவித்தார். ஆனால் கோவிலுக்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் மாநில அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தியதுடன், அரசின் விளக்கத்தையும், கோவிலுக்குள் அனுமதிக்க முடியுமா என்பது குறித்தும் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று மதியம் 2:15 தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *