மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமானவர் தேவநேயப் பாவாணர். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று, சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். இவர் கோமதிமுத்துபுரத்தில் பிறந்ததாகத் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரநயினார் கோவிலில் (சங்கரன்கோவில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தவர் வல்லுநருமானவர் தேவநேயப் பாவாணர். இவரது தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் சிறப்பாக இருந்ததால் “மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்” என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். “தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி” என வழக்காடியவர் இவர். கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர். தமிழ்த்தேசியத்தந்தையாகப் போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு ஆசிரியராக இருந்த இவர், அவரின் தென்மொழி வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டார். மொழித்திறன் கொண்ட இந்த தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் இன்று..!