உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற துணை தலைவரை மதிப்பதில்லை, நிகழ்ச்சிகள் குறித்து கூட தகவல் அளிப்பதில்லை என துணை தலைவர் தேன்மொழி குற்றச்சாட்டால் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர நகர் மன்ற உறுப்பினர்களின் கூட்டம், நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தின் மேடையில் நகர் மன்ற துணைத் தலைவர் தேன்மொழிக்கும் இருக்கை ஒதுக்கி இருந்த சூழலில், நகராட்சி அஜந்தாவிலும் பெயர் இல்லை, நகராட்சி சார்பில் நடைபெறும் பேரணி, ஊர்வலங்களிலும் பெயர் இடம்பெறவில்லை, அழைப்பு கூட இல்லை, மதிப்பதில்லை என குற்றம் சாட்டி, நகர் மன்ற உறுப்பினராகவே இருந்து கொள்கிறேன் என நகர் மன்ற உறுப்பினர்களோடு அமர்ந்து துணை தலைவர் தேன்மொழி வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி ஆணையாளர் சக்திவேல், விரைவில் குறைபாடுகள் சரிசெய்யபடும் என உறுதி அளித்ததை அடுத்து துணை தலைவர் இருக்கையில் தேன்மொழி அமர்ந்தார்.

இதே போல் நகராட்சிக்கு தேவையான கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எடுத்துக் கூறி நீதியை பெற்றுத் தர நகர் மன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏ விடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த எம்எல்ஏ அய்யப்பன், சட்டமன்ற கூட்ட தொடரில் உசிலம்பட்டி தொகுதி சார்ந்து வைக்கும் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை. நானும் கத்திக் கொண்டே இருக்கிறேன் என எம்எல்ஏவும் புலம்பிய சம்பவம் மேலும் பரபரப்பை உண்டாக்கியது.





