• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அக்.12ல் வாலாஜபாத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

Byவிஷா

Oct 10, 2023

அக்டோபர் 12ஆம் தேதியன்று அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரி, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதி, வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சாலையெங்கும் பரவிக் கிடக்கும் கழிவுநீரால் கடுமையான சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. பாலாற்றின் குறுக்கே வாலாஜாபாத் - அவளூர் தரைப் பாலம் வெள்ளத்தால் சேதமடைந்துவிட்டதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக அவதியுறுவதோடு, விபத்துகளிலும் சிக்குகின்றனர்.
வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களோ, சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகளோ, மருத்துவ உபகரணங்களோ இல்லாத காரணத்தால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வாலாஜாபாத் பகுதியில் வாழும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசையும், பேரூராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, வாலாஜாபாத் பேரூராட்சியில் நிலவிவரும் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யவும், பாலாற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள தரைப் பாலத்தை சீரமைக்கவும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமித்து, மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் உடனடியாக ஏற்படுத்தித் தரவும் வலியுறுத்தி அதிமுக சார்பில் 12-ம் தேதி காலை 10 மணிக்கு, வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக அமைப்புச் செயலாளர்களான மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் தலைமையிலும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.