• Fri. Mar 29th, 2024

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும், இலங்கை கடல் படையினரின் அட்டகாசங்களை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம்!…

கடந்த 18ஆம் தேதி இலங்கை கடற்படை கப்பலை கொண்டு திட்டமிட்டு முட்டி மூழ்கடித்து இந்திய மீனவர் ராஜ்கிரனை கொன்ற கொடூர செயலை கண்டித்து மீனவ தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு அமைப்பின் தலைவர் காரல் மார்க்ஸ் தலைமையிலும், தங்கச்சிமடம் மீனவ சமூக தலைவர் சம்சன் மற்று மீனவ சங்க தலைவர் சேசுராஜ், போஸ், மகத்துவம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் இந்திய மீனவனை கொன்ற இலங்கை அரசை கண்டித்தும் இந்த படுகொலைகளை கண்டிக்காத இந்திய அரசை கண்டித்தும் கண்டன குரல் எழுப்பப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு கடந்த ஜனவரி 18ஆம் தேதி அன்று நடந்தது. இதில் மெசியா, செந்தில்குமார், நாகராஜன், சாம்சன் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதுபோன்ற படுகொலைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து செய்துவருவதும் அதை இந்திய அரசு வேடிக்கை பார்த்து வருவது குறித்த கண்டனத்தை மீனவர்கள் கடுமையாக பதிவு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கடலில் இருநாட்டு மீனவர்களிடையே நடந்த விரும்பத்தகாத நிகழ்வுக்கு இந்திய மீனவர்கள் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீனவர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்துவரும் இலங்கை அரசியல் தலைவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்திய மீனவர் ராஜ்கிரனை கொன்ற இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்யவும், இறந்த மீனவர் ராஜ்கிரன் குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க கோரியும், இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த கோரியும், மீனவர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவும் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதில் மீனவ சங்க தலைவர்கள், அனைத்துக்கட்சி தலைவர்கள், மீனவ தொழிலாளர் பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *