• Wed. Dec 11th, 2024

பிப்.16ல் திண்டிவனத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டடம்

Byவிஷா

Feb 12, 2024

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் வருகிற 16ஆம் தேதியன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகுந்த சிரமப்பட்டு அச்சத்துடன் வாழவேண்டிய சூழ்நிலை நிலவுவது வாடிக்கையான ஒன்றாகும். அதே போல், மக்கள் நலன் கருதி அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் கொண்டுவரப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களை முடக்குவதும், நீர்த்துப் போகச் செய்வதும் தொடர்கதைதான் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. இதனால் நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளன. மேலும் குப்பைகள் சேகரிக்கப்படாமல் அந்தந்த சாலையிலேயே எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தி.மு.க. அரசின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்தும், திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிடவும் வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் ஆர்.எஸ். பிள்ளை வீதி, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமையில் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியின் உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.