தமிழக அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் 3 சட்டங்களையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் இயற்றி உள்ளார். இதற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில்,
விவசாயிகள் தொடர்ந்து சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்தத் தீர்மானத்தை வலுப்பெறச் செய்யும் வகையில் அனைத்து மாநிலங்களும், இந்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.