• Fri. Apr 26th, 2024

பாம்பன் பாலத்தில் 2-வது நாளாக
ரயில் போக்குவரத்து நிறுத்தம்

தொழல்நுட்ப கோளாறு காரணமாக பாம்பன் பாலத்தில் 2-வது நாளாக நேற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் கடந்த 23-ந் தேதி இரவில் ரயில் செல்லும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராமேசுவரம் வரும் அனைத்து ரயில்களும் மண்டபம் வரை இயக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக நேற்று தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இன்ஜினீயர் பி.கே.குப்தா மற்றும் தெற்கு ரயில்வே பாலங்களின் தலைமை இன்ஜினீயர் சுமித் சின்ஹால் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பாம்பன் தூக்கு பாலத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். தூக்கு பாலத்தில் ரயில்கள் செல்லும்போது அதிர்வுகள் அளவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆய்வு நடந்தது. ஆய்வுக்கு பின்னர் ரயில்வே இன்ஜினீயர்கள் குழுவினர் கூறுகையில், தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளன. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தூக்கு பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம்போல் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும், என்றனர்.
இதனிடையே 2-வது நாளாக நேற்றும் சென்னை செல்லும் 2 ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. அதுபோல்
மதுரையிலிருந்து ராமேசுவரம் வரவேண்டிய பயணிகள் ரயில் மற்றும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வர வேண்டிய ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்தே மீண்டும் புறப்பட்டு சென்றன. அதாவது, மதுரை மற்றும் திருச்சி ரயில்கள் தற்காலிகமாக ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *