• Fri. Mar 29th, 2024

தசாவதாரம்-2க்கு வாய்ப்பே கிடையாது… இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உறுதி…

Byகாயத்ரி

May 16, 2022

சமீபத்தில் வெளியாகிய கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் தயாரிப்பாளரும், அதன் முன்னணி கதாபத்திரத்தில் நடித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அந்த படத்தின் நாயகன் தர்ஷன், நாயகி லாஸ்லியா போன்றோருடன் சென்னை, திருப்போரூரிலுள்ள எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் “கூகுள் குட்டப்பா” மிகவிரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ள சூழ்நிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஓடி.டி தளம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இவ்விழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேசியிருப்பதாவது, “கமல் எப்போதுமே கடின உழைப்பை நம்பக்கூடியவர் ஆவார். வலி இன்றி வெற்றி இல்லை என்பது அவரது பாலிசி ஆகும். தசாவதாரம் திரைப்படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார்.

சில நாட்களுக்கு முன்பு தசாவதாரம் ரிலீசாகி 12 வருஷம் ஆச்சா? என ஆச்சரியத்துடன் 2 மணி நேரம் பேசினார். சில ஆண்டுகளாகவே கமலையும், என்னையும் பார்த்து தசாவதாரம் 2 எப்போது என்று கேட்கிறார்கள். எனினும் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு திரைப்படத்தை உருவாக்கவே முடியாது. ஆகவே “தசாவதாரம்-2″க்கு வாய்ப்பே கிடையாது. ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்து எல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை.இதற்கிடையில் தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என சொல்லிக்கொண்டிருந்தார்கள். சினிமாவை திரை அரங்கில் பார்க்கும் அனுபவத்திற்கு எதுவுமே ஈடாகாது. அதே நேரம் ஓடிடி என்பது மற்றோரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சமீபத்தில் வெளியாகிய எங்கள் “கூகுள் குட்டப்பா”வை திரை அரங்குகளுக்குச் சென்று பாருங்கள். அப்படிப்பார்க்க தவறியவர்கள் விரைவில் வெளியிடப்பட உள்ள ஆஹா ஓ.டி.டி. தளத்தில் பாருங்கள்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *