• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தொடர் சிக்கலில் ‘எதற்கும் துணிந்தவன்’!

நடிகர் சூர்யா நடிப்பில், எதற்கும் துணிந்தவன் மார்ச் 10ம் தேதி வெளியான நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அந்த படம் பெற்றிருக்கிறது. சில பிரச்சனைகள் காரணமாக அதிகமான திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் வெளியாகவில்லை. அதன் காரணமாக வியாழக்கிழமை அன்று படத்தின் வசூல் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது!

அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடக் கூடாது என பெரும் எதிர்ப்புகளும் மறைமுக மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்கே மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது.

இத்திரைப்படத்தின் முதல் நாளில் தமிழ்நாடு அளவில் 9 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்திற்கு பிரபல யூடியூப் விமர்சகர்கள் மற்றும் பல மீடியாக்களும் கலவையான விமர்சனங்களை கொடுத்திருக்கின்றன. சூர்யா மட்டும் தான் கன்டென்ட் படங்களை நோக்கி நகர்கிறார் என சந்தோஷப்பட்டவர்கள், அவரும் மசாலாவில் இறங்கியது ஏன் என்று ஒரு பக்கம் கேள்வி எழுந்துள்ளது!

இந்நிலையில், இப்படத்தில் முருகக் கடவுளை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகள் அமைந்துள்ள பாடலை நீக்க வேண்டும் என அகில இந்திய நேதாஜி கட்சி தெரிவித்துள்ளது.

பாடல் ஆசிரியர் யுகபாரதி உள்ளம் உருகுதய்யா என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இப்பாடலை படத்தில் இருந்து நீக்க கோரியும் அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் இந்த படத்தில் நடித்த சூர்யா, இயக்குனர் பாண்டியராஜன், இசையமைப்பாளர் டி இமான், தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை அமைத்த பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொடக்கம் முதலே பல சிக்கல்களை சந்தித்து வரும் “எதற்கும் துணிந்தவன்” படம் குறித்த முழு வெற்றி அறிவிப்புக்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்..