கோவை, அவினாசி சாலையில் சிக்னல் மற்றும் டிராபிக் நெரிசலில் நிற்பதைத் தவிர்ப்பதற்காகத் தனியார் பேருந்து ஒன்று விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் எதிர் திசையில் (Wrong Side) இயக்கப்பட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கோவை மாநகரின் மிக முக்கிய மற்றும் எப்போதும் பிஸியாகக் காணப்படும் அவினாசி சாலையில் இன்று மாலை நேரத்தில் வழக்கத்தை விடக் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. குறிப்பாக, சின்னியம்பாளையம் அருகே உள்ள கரியாம்பாளையம் ஜங்ஷன் பகுதியில் சிக்னல் காரணமாக இருசக்கர வாகனங்கள், கார்கள் என நூற்றுக் கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

அப்போது, அந்த வரிசையில் நின்று செல்வதைத் தவிர்ப்பதற்காக, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சற்றும் யோசிக்காமல், பேருந்தை திடீரெனச் சாலையின் எதிர் திசையில் அதிவேகமாகச் செலுத்தி அத்துமீறி நுழைந்தார்.
முறையான திசையில் விதிகளுக்கு உட்பட்டு வந்து கொண்டு இருந்த வாகனங்களுக்கு நேர் எதிரே இந்தத் தனியார் பேருந்து திடீரென வந்து நின்றதால், எதிரே வந்த வாகனங்கள் எதுவும் நகர முடியாமல் வழியடைபட்டன. இதனால் கரியாம்பாளையம் ஜங்ஷன் பகுதி முழுவதுமாகப் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது.
ஏற்கனவே சிக்னல் காரணமாக நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், பேருந்தின் இந்த அலட்சியமான விதிமீறலால் அப்பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தனியார் பேருந்து ஓட்டுநரின் இந்த ஆபத்தான செயலால் அவசரத் தேவைக்காகச் சென்ற பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின.

அவினாசி சாலை போன்ற அதிவேகப் பாதையில், சக பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து எதிர் திசையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தத் தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து உள்ளனர்.








