• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாலத்தின் நடுவில் உள்ள ஆபத்தான பள்ளத்தால் அபாயம்..,

ByKalamegam Viswanathan

Jan 7, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தை அடுத்த நெடுங்குளம் தச்சம்பத்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள பாலத்தில் நடுவில் ஆளை விழுங்கும் வகையில் உள்ள ஆபத்தான பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்

இந்த பகுதியில் உள்ள ரிஷபம் ஊராட்சி மயானத்திற்கு செல்லும் முக்கிய பாதையான இந்த இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்களுக்கு செல்வதற்காகவும் ரிஷபம் ராயபுரம் திருமால் நத்தம் போன்ற கிராமங்களில் இருந்து நெடுங்குளம் தச்சம்பத்து திருவேடகம் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காகவும் சாலை அமைக்கப்பட்டது

அப்போது திருமால் நத்தம் மயானம் அருகே சோழவந்தான் நகரி சாலையின் இணைப்பு பகுதியில் பாலம் ஒன்று கட்டப்பட்டதாக கூறப்படுகிறது

பாலம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில்
இன்று திடீரென பாலத்தின் நடு பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது இந்த பள்ளத்தின் காரணமாக பாலத்தின் மேல் பகுதி உள்வாங்கி பாலத்திற்குள் உள்ள கட்டுமான கம்பிகள் சிமெண்ட் சிலாப்புகள் ஆகியவை தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளது

இதற்கு கீழே இந்த பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய கால்வாய் நீரும் சென்று கொண்டுள்ளது இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் இந்த பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து செல்வதால் எப்போது வேண்டுமானாலும் பாலம் இடிந்து அப்படியே உட்காரும் நிலைக்கு செல்லக்கூடிய நிலை உள்ளது

இன்று காலை முதல் இந்த பள்ளத்தின் வழியாக இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் நிலையில் பாலம் சிறிது சிறிதாக தனது பிடிமானத்தை இழந்து வருகிறது

எப்போது வேண்டுமானாலும் இடிந்து பெரும் விபத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ள இந்த பாலத்தை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் அருகிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கக்கூடிய தனியார் பள்ளி ஒன்று உள்ள நிலையில் பள்ளிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகிறது

அவ்வாறு செல்லும் நிலையில் பள்ளம் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் பெரும் விபத்து ஏற்படும் முன் பாலத்தின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.