• Thu. May 2nd, 2024

உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை..!

Byவிஷா

Oct 14, 2023

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியின் இன்றைய ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
2023 ஒருநாள் உலகக் கோப்பை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட ஒரு போட்டியை விளையாடி முடித்து விட்டன, ஆனால் இந்த உலகக் கோப்பையில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தொடக்க விழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது தொடக்க விழா இல்லாத குறையை பிசிசிஐ ஈடு செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வ தொடக்க விழாவாக இருக்காது. ஆனால் இந்த போட்டியின் போது கிரிக்கெட் உலகின் பல நட்சத்திரங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் அகமதாபாத் ஸ்டேடியத்தை அடைவார்கள் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த போட்டியை காண இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் மைதானத்திற்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மைதானத்தில் சுமார் 1.32 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7,000 குஜராத் போலீசாரும், 4,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். அதே நேரத்தில், மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் இந்த போட்டியை மைதானத்தில் தங்கி பார்ப்பார். அதேபோல நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை சிறப்பாக தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும், இந்திய அணி வெற்றி பெற்றது. இதேபோல பாகிஸ்தான் அணியும் இலங்கை மற்று நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக, அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் சங்கர் மகாதேவன், அரிஜித் சிங் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நண்பகல் 12.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்வையிடும் நிலையில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *