குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் முடிவெடுக்கும் அமைப்பான பார்லிமென்ட்ரி போர்டு கூட்டம் இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பிறகு பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா செய்தியாளர்களை சந்தித்து இதை அறிவித்தார்.
கடந்த மாதம் ஜக்தீப் தன்கர் திடீரென குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவருக்குப் பிறகு யார் வருவார் என்பது குறித்த பல யூகங்கள் நிலவி வந்தன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான 11 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமெண்ட்டரி போர்டு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் நட்டா செய்தியாளர்களிடம் பேசுகையில், “சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு அரசியல்வாதியாக தொடங்கி, இப்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மரியாதைக்குரியவர்.
அடுத்த துணை ஜனாதிபதி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், எதிர்க்கட்சித் தலைவர்களை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்” என்றும் நட்டா மேலும் கூறினார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சி.பி.ராதாகிருஷ்ணனை துணைக் குடியரசுத் தலைவராக்கும் பாஜகவின் மூவ் முக்கியத்துவம் பெறுகிறது.