• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனுவை ரத்து செய்த நீதிமன்றம்

Byவிஷா

Nov 14, 2024

தெலுங்கு மொழி பேசுபவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பிராமணர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் நடத்திய கூட்டத்தில் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், இரு சமூகங்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்த பேச்சு முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.
மனுதாரர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாது பிரிவுகளாகும். மனுதாரர் மீது 6 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது.” என்றார்.
கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் வாதிடுகையில், “சென்னைக் கூட்டத்தில் மனுதாரர் சிலரை குறிப்பிட்டே அவ்வாறு பேசினார். மொத்த சமூகத்துக்கு எதிராக அவர் பேசவில்லை. இருப்பினும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது இல்லை. இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்.” என்றார்.

அப்போது நீதிபதி, “குறிப்பிட்ட சிலர் குறித்து தான் மனுதாரர் அவ்வாறு பேசினார் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட சிலரை பற்றி பேசும் போது அந்தப்புரம் ஏன் வருகிறது? தெலுங்கு பேசும் பெண்கள் ஏன் வருகிறார்கள்? மனுதாரர் வருத்தம் தெரிவித்துள்ள வெளியிட்டுள்ள பதிவு, அவர் பேசியதை நியாயப்படுத்துவது போல் உள்ளது. அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.” என்றார்.
தொடர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “தமிழகத்துக்கும் கர்நாடகம், கேரளம் இடையே சில பிரச்சினை உள்ளது. தமிழகத்தின் நட்பு மாநிலங்களாக இருப்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா. திருப்பதி செல்லும் பக்தர்கள் 40 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவ்விரு மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு கஸ்தூரி இவ்வாறு பேசியுள்ளார்.
சென்னைக் கூட்டத்தில் ஒரே கொள்கை உடைய பல்வேறு சமூகத்தினர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொழிரீதியாக பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இதை அனுமதித்தால் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு ஏற்படும். மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவரைப்போல் மற்றவர்களும் பேசத் தொடங்குவார்கள். எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என்றார்.

இதையடுத்து கஸ்தூரி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி இன்று (நவ.14) ஒத்திவைத்தார். இன்று காலை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.