டெல்லியில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள 6 முக்கிய மருத்துவமனைகளில் குறைந்தது 750 மருத்துவர்களும், நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததையடுத்து, வீட்டு தனிமையில் உள்ளனர்.
மருத்துவர்களை கொரோனா தாக்க தொடங்கியதால், நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வழக்கமான கிளினிக்குகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு வருபவர்களை குறைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதில், எய்ம்ஸ் மருத்துவமனை தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 350 மருத்துவர்களுக்கு பாதிப்பு உறுதியாகி, தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் வெளிநோயாளர் சிகிச்சைகளை குறைத்து, வெள்ளிக்கிழமை முதல் வழக்கமான சேர்க்கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அனுமதிப்பதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய குடியுரிமை மருத்துவர், ‘ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் அல்லது ஊழியருடன் தொடர்பில் இருந்தவரை தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு காரணம், அறிகுறிகள் லேசானது மற்றும் மனிதவள சூழ்நிலைக்கு உதவும் என்று கூறுவதாக’ தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒமிக்ரான் நோயாளிகளின் சிகிச்சைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஒரே டெல்லி அரசு மருத்துவமனையான லோக் நாயக்கில் பணியாற்றும் ஜூனியர் குடியுரிமை மருத்துவர்கள் உட்பட 29 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அந்த மருத்துவமனையை சேர்ந்த குடியுரிமை மருத்துவர் பேசுகையில், ‘கொரோனா வார்டில் பணியாற்றும் பெரும்பாலானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களை பொறுத்தவரை மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நிச்சயமாக, இது மருத்துவமனை சேவைகளை பாதிக்கிறது.
மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளர் பிரிவுக்கு புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை, பழைய நோயாளிகளும் ஒரு பிரிவுக்கு 50 முதல் 100 பேர் வரை மட்டுமே இருக்கும் வகையில் மாற்றியுள்ளனர். அவசர அறுவை சிகிச்சை மட்டுமே திட்டமிடப்படுகிறது’ என்றார்.
சப்தர்ஜங் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 200 குடியுரிமை மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த மருத்துவமனையில் சேர்ந்த குடியுரிமை மருத்துவர் பேசுகையில், ‘ நீட்-பிஜி கவுன்சிலிங்கில் தாமதம் ஏற்பட்டதால் காலியிடங்களை நிரப்ப 302 கல்விசாரா ஜூனியர் குடியுரிமை ஊழியர்களை பணியமர்த்த மருத்துவமனை முடிவு செய்துள்ளது. சில மூத்த குடிமக்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
அதேபோல், மக்கள் அதிகளவில் வருவதை தடுத்திட, வெளிநோயாளி பிரிவுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. எனது பிரிவில், நான்கு பேரில் மூன்று பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. நிச்சயம், நான்காவது நபர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கலாம். ஆனால், அவர் பணி செய்வதை நிறுத்திவிட்டால், யார் வேலை செய்வார். மருத்துவர்கள் தொடர்பில் இருந்ததற்காக, தனிமைப்படுத்திட நேரம் வழங்குவது சாத்தியமில்லாத ஒன்று’ என தெரிவித்தார்.
மத்திய அரசால் நடத்தப்படும் ஆர்எம்எல் மருத்துவமனையில், குறைந்தது 90 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனையின் குடியுரிமை மருத்துவர் கூறுகையில், பாதிக்கப்படாத மருத்துவர்கள் அதிக ஷிப்டுகளை எடுத்துக்கொண்டு, நீண்ட நேரம் பணியாற்றி சேவைகள் பாதிக்காமல் பார்த்துக்கொள்கின்றனர்’ என்றார்.
லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மற்றும் இரண்டு தொடர்புடைய மருத்துவமனைகளில், கிட்டத்தட்ட 100 குடியுரிமை மருததுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. லேடி ஹார்டிங் மற்றும் RML இரண்டிலும், வழக்கமான அறுவை சிகிச்சைகளை நிறுத்துவதற்கான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
குரு தேக் பகதூர் மருத்துவமனையில், 175 ஊழியர்கள் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் மருத்துவர்கள் ஆவர்.
மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த புள்ளிவிவரம் மருத்துவமனை கணக்கு மட்டும் தான். மருத்துவக் கல்லூரியில் உள்ள பலருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாங்கள் 66% ஜூனியர் குடியுரிமை ஊழியர்களுடன் பணிபுரிந்தோம். தற்போது பலருக்கு பாதிப்பு உறுதியானதால், பணியில் உள்ள மற்ற குடியுரிமை ஊழியர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது’ என்றார்.