• Thu. May 2nd, 2024

மக்களவைத் தேர்தலில் மாஸ் பிளானுடன் களமிறங்கும் காங்கிரஸ்..!

Byவிஷா

Dec 29, 2023

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு மாதம 6,000 ரூபாய் வழங்கப்படும் என மாஸ் பிளானுடன் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 139ஆவது நிறுவன நாள் நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டத்திலிருந்து காங்கிரஸ் தனது பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளது.
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி..,
“காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்ததும் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். நாட்டின் மக்கள் தொகையில் ஓபிசி 50 சதவீதமும் தலித்துகள் 15 சதவீதமும் பழங்குடியினர் 12 சதவீதமும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த துறையிலும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சி, பெண்கள் தலைமையில் வெண்மைப் புரட்சியும், விவசாயிகள் தலைமையில் பசுமைப் புரட்சியும், இளைஞர்கள் தலைமையில் தொழில்நுட்பப் புரட்சியும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தை எட்டி உள்ளது.
மக்களின் நலனுக்காக எதுவும் செய்யாத பாஜக, ஓபிசி, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்காக பாடுபடுவதாக மார்த்தட்டிக் கொள்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று பேசினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது..,
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 2019ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின் படி ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் பிரச்சார வியூகம் கைகொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *