• Fri. Jan 24th, 2025

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய்வசந்த் நாள்தோறும் தீவிர பிரச்சாரம்

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் நாள்தோறும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரம்பு பகுதியில் உள்ள அன்னை இந்திரா காந்தி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் விஜய் வசந்த்-க்கு இந்தியா கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பரப்பரையின் போது, வாக்குசேகரித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த்

கடந்த 2019 ஆம் ஆண்டு எனது தந்தையை பாராளுமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அவரது மறைவுக்கு பின்பு 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு பேராதரவை அளித்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள்.

இதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டில் எந்தவித வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

நவீன முறையில் எவ்வாறு ஊழல் செய்வது என்பதே பாஜக ஆட்சியின் சாதனையாக இருக்கின்றது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை நிதியைப் பெற்று மிகப்பெரிய ஊழலை பாஜக அரசு அரங்கேற்றியுள்ளது.

இங்கே போட்டியிடுகின்ற பாஜக வேட்பாளரால் பா ஜ க ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாத ஒரு அவல நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவு மக்கள் மத்தியில் இருக்கும் காரணத்தினால் நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எங்களுக்கு மகிழ்ச்சியுடன் பேரா தரவை தந்து வருகின்றனர்.

இதனால் என்ன சொல்லி வாக்கு கேட்பது என்பது தெரியாமல் எங்களை குறை சொல்வது மட்டுமே குறிக்கோளாக வைத்து அரசியலுக்காக பேசி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.

ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் மீண்டும் வாய்ப்பு கேட்டு பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து உங்கள் மத்தியில் வருவார்கள் அவர்களை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

குமரி மக்களின் நீண்ட நாள் கனவான தடைப்பட்டு கிடந்த நான்கு வழி சாலை திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்காக மத்திய அரசிடம் பல்வேறு தடைகளையும் தாண்டி போராடி 147 கோடி ரூபாய் நிதியை பெற்று அந்த பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

எனது முயற்சியால் இரட்டை வழி ரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் ரயில்வே மேம்பாலங்களை அமைத்துக் கொடுத்துள்ளேன். நான் வாங்கிய சம்பள பணம் அனைத்தையும் ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவழித்துள்ளேன்.

இன்றைக்கு நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று தேவைப்படுகிறது. அதற்கு நீங்கள் வருகின்ற ஏப்ரல் 19 தேதி வாக்கு சாவடிக்கு சென்று இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் எனக்கு உங்களது வாக்குகளை கை சின்னத்தில் தாருங்கள் என கேட்டு வாக்கு சேகரித்தார்.