• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாலிவுட்டில் நடிக்க இருக்கும் இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி, தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்! இந்நிலையில் இவர் தற்போது இந்தியிலும் நடிக்கவுள்ளார். தமிழ், இந்தியில் உருவாகும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து சிறப்பான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். முதலில், சைக்கலாஜிக்கல் படங்களில் நடித்தவர் தொடர்ந்து கமிர்ஷியல் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

அவரது நடிப்பு குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், அதற்கெல்லாம் ஒரே வரியில் பதில் கூறினார் விஜய் ஆண்டனி. தான் நடிகனாக இல்லாமல் ஹீரோவாக இருக்கவே விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதனிடையே கோலிவுட்டில் விஜய் சேதுபதிக்கு போட்டியாக அதிகமான படங்களில் நடித்து வருபவர் என்ற பெயரும் இவருக்குண்டு.

சமீபத்தில் இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய இவரது படங்களின் சூட்டிங்க் நிறைவடைந்துள்ளது. இந்தப் படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக பிச்சைக்காரன் 2, கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம் ஆகிய 4 படங்களின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதனிடையே அடுத்ததாக சுசீந்திரனின் இயக்கத்திலும் இவர் கமிட்டாகியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது வீரபாண்டியபுரம் ரிலீசாக உள்ளது. இதையடுத்து விஜய் ஆண்டனியின் படத்தை இயக்கவுள்ளார் சுசீந்திரன்.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கவில்லை. மாறாக டி இமான் இசையமைக்கவுள்ளார். இதனிடையே தமிழ் மற்றும் இந்தியில் உருவாகவுள்ள மற்றொரு படத்திலும் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.

விஜய் ஆண்டனியில் படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாகி வருகின்றன. ஆனால் நேரடியாக அவர் இந்திப் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இந்திப் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது!