• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஹல்திராம்ஸ்ஸின் பங்குகளை வாங்க போட்டி போடும் நிறுவனங்கள்

Byவிஷா

May 18, 2024

தின்பண்டங்கள் முதல் இந்தியாவின் உள்ளூர் இனிப்பு உணவுகள் வரை தயாரித்து, உலகமெங்கும் சந்தைபடுத்தும் நிறுவனமான ஹல்திராம்ஸின் பங்குகளை வாங்க பல்வேறு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் பிரசித்தி பெற்ற பெயர் தான் ஹல்திராம்ஸ். தின்பண்டங்கள் முதல் இந்தியாவின் உள்ளூர் இனிப்பு உணவுகள் வரை தயாரித்து, உலகமெங்கும் சந்தைபடுத்தும் இந்நிறுவனம், உணவு தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இப்போது, பிளாக்ஸ்டோன் மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணையம் போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஹல்திராம்ஸ்ஸை வாங்குவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
1937ம் ஆண்டு ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள ஒரு “சிறிய கடையில்” ஹல்திராம்ஸ் தொடங்கப்பட்டது. ஹல்திராம் ஜி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட கங்கா பிஷன் அகர்வால் என்பவர் தொடங்கிய இந்நிறுவனம், தன் முதல் உற்பத்தி ஆலையை கொல்கத்தாவிலும், இரண்டாவது உற்பத்தி ஆலையை 1970 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரிலும், மூன்றாவது உற்பத்தி ஆலையை டெல்லியிலும் அமைத்தது.
ஹல்திராம்ஸ் இரண்டு பிரிவுகளாக இயங்குகிறது. ஹல்திராம்ஸ் ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் நாக்பூர் பிரிவினரால் வழிநடத்தப்படும் அதே வேளையில், ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் டெல்லி பிரிவினரால் வழிநடத்தப்படுகிறது. காலத்துக்கேற்ப, நுகர்வோரைக் கவரும் வகையில் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த, ஹல்திராம் ஸ்நாக்ஸ் ஃபுட் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்க இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்தன.
நாக்பூரை தலைமையிடமாக கொண்ட ஹல்திராம்ஸ் பிரிவின் வருவாய் 2022 நிதியாண்டில் 3,622 கோடி ரூபாய் ஆகும். அதே நிதியாண்டில், டெல்லியைச் சேர்ந்த ஹல்திராம்ஸ் பிரிவின் வருவாய் 5,248 கோடி ரூபாய் ஆகும்.

கிட்டத்தட்ட 1,000 விநியோகஸ்தர்களைக் கொண்டுள்ள ஹல்திராம்ஸ் தயாரிப்புகள் 70 லட்சம் விற்பனை நிலையங்களில் கிடைப்பதோடு, இது ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விற்பனை மட்டுமில்லாமல், 150க்கும் மேற்பட்ட உணவகங்களை நடத்தும் ஹல்திராம்ஸ், சீன மற்றும் மேற்கத்திய உணவு வகைகளையும் விற்பனை செய்கின்றன. இத்தனை பாரம்பரியம் கொண்ட ஹல்திராம்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு ஏலப் போட்டி தொடங்கி உள்ளது.
அபுதாபி முதலீட்டு ஆணையம் (ஏடிஐஏ) மற்றும் சிங்கப்பூரின் ஜிஐசி ஆகியவற்றுடன் இணைந்து பிளாக்ஸ்டோன் என்ற நிறுவனம், கடந்த வாரம் ஹல்தி ராமின் ஸ்நாக்ஸ் ஃபுட் நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளுக்கு தமது ஏலத்தைச் சமர்ப்பித்துள்ளது. 8.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் கேட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்த ஏலத்தில், எத்தனை சதவீத பங்குகள்? என்ன மதிப்பீடு? இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்திருக்கும் நிலையில், ஹல்திராம்ஸ் நிறுவனத் தலைமை செயல் தலைவரும், பிளாக்ஸ்டோன்தலைமை அதிகாரியும் இது குறித்து இது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
சில ஆண்டுகளாகவே ஹல்திராம்ஸ் நிறுவனத்தை வாங்க பலர் போட்டி போடுவதாக செய்திகள் வந்த கொண்டிருந்த நிலையில் , இந்தியாவின் டாடா குழுமம் முழு சிற்றுண்டி மற்றும் உணவகங்கள் வணிகத்தில் ஹல்திராம்ஸ்ஸின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க ஹல்திராம்ஸ் உடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதில் ஹல்திராம்ஸ் உறுதியாக இருந்ததால், டாடா உடனான விற்பனை பேச்சுவார்த்தை முறிந்து போனது.
வேறு சில நிறுவனங்களும் ஹல்திராம்ஸ்ஸின் பங்குகளை வாங்க முயற்சித்து வந்த நிலையில், இப்போது பிளாக்ஸ்டோன் ஏலத்தை சமர்ப்பித்திருக்கிறது.
இந்திய மக்களின் வீட்டுப்பெயரான ஹல்திராம்ஸ் நிறுவனத்தை அந்நிய நாட்டு நிறுவனம் கைப்பற்றி விடுமா? என்ற கேள்விக்கு பதில் ஹல்திராம்ஸ் கையில் தான் இருக்கிறது.