சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில், நேற்றையதினம் (20.05.2025) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பாறை மற்றும் மண் சரிவு விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 05 நபர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.04.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கிட உத்தரவிட்டார்.

இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த 5 நபர்களில், குழிசேவல்பட்டியை சேர்ந்த கணேஷ், ஒடப்பட்டியை சேர்ந்த முருகானந்தம், இ.மலம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ஆண்டிச்சாமி ஆகியோர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.04.00 இலட்சத்திற்கான காசோலையினை
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கியதுடன், அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்தும் தலா ரூ.01.50 இலட்சம் நிதியுதவியினையும், தனியார் குவாரியின் சார்பில் தலா ரூ.05.00 இலட்சம் வீதம் நிதியுதவியும் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10.50 இலட்சத்திற்கான நிவாரண நிதியுதவியினை நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார்.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷித் குடும்பத்தினர் வருகை புரிந்தவுடன் உரிய நிவாரண நிதியுதவிகள் அக்குடும்பத்தினரிடம் வழங்கப்படும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கைக்கிணங்க, அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.