• Thu. Mar 27th, 2025

கர்ப்பிணிபெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி – எம்.பி. மாணிக்கம் தாகூர்

ByKalamegam Viswanathan

Mar 8, 2025

மதுரை மாநகராட்சி சார்பில் திருநகரில் நூறு கர்ப்பிணிபெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி சீரியலையும், மொபைல் போனையும் பிரசவ காலம் வரை தள்ளி வையுங்கள் உங்கள் வயிற்றில் இருப்பது இந்தியாவின் எதிர்காலம், தமிழ்நாட்டின் எதிர்காலம். ஆகவே நல்லதை பார்ப்போம். நல்லதை உணர்வோம் நீங்களும் குழந்தைகளும் நலமாக இருக்கணும் என எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் திருப்பரங்குன்றம் வட்டாரம் சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.மாணிக்கம் தாகூர் திருப்பரங்குன்றம் மண்டல 5ன் தலைவர் சுவிதா விமல் 94வது மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்யன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு செய்து மாலை அணிவித்து மஞ்சள், குங்குமம் வைத்து வளைகாப்பு நடத்தி அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

சமுதாய வளைகாப்பு விழா கூட்டத்தின் முடிவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு பொங்கல், புளியோதரை, தக்காளி சாதம் உள்ளிட்ட 5 வகையான வளைகாப்பு சாப்பாடு வழங்கப்பட்டது.

பின்னர் கர்ப்பிணி பெண்களிடம் பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது..,

உங்கள் வயிற்றில் இருப்பது இந்தியாவின் எதிர்காலம் தமிழ்நாட்டின் எதிர்காலம் கொஞ்ச நாளைக்கு டிவி சீரியலை பார்க்காமல் தள்ளி வையுங்கள் மொபைல்களை தள்ளி வையுங்கள். நல்லதை பாப்போம், நல்லதை உணர்வோம் நீங்களும் குழந்தைகளும் நல்லா இருக்கணும்.

மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகள் வழிமுறைகளை பின்பற்றுங்கள். சத்தான உணவு வகைகளை நேரம் தவறாமல் சாப்பிட்டு உங்களின் ஆரோக்கியத்தையும், குழந்தைகளின் நலனையும் கருத்தில் கொண்டு தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்து, நலமோடு வாழுங்கள். உங்களையும், உங்கள் குழந்தைகளையும் எதிர்கால தமிழகம் மற்றும் இந்தியாவும் வரவேற்க காத்திருக்கிறது.