• Thu. Nov 5th, 2026

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Nov 5, 2026

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு, குடிபோதையில் அரசு பேருந்தை ஓட்டுநர் திடீரென எடுத்துக்கொண்டு திருமங்கலத்திற்கு ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்த திருமங்கலம் டிப்போவுக்குச் சொந்தமான தடம் எண் 48 அரசு பேருந்தில் பொதுமக்கள் அமர்ந்திருந்தனர். அப்போது ஓட்டுநர் சீனிவாசன் திடீரென பேருந்தை எடுத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்திற்குள் நடத்துநர் முனியசாமி இருந்துள்ளார்.
இதனைக் கண்ட போக்குவரத்து உயர் அதிகாரிகள் உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாகச் செயல்பட்ட போலீசார், சீனிவாசன் ஓட்டி வந்த பேருந்தை நிறுத்த முயன்றனர். ஆனால், அவர்களின் எச்சரிக்கையையும் மீறி சீனிவாசன் பேருந்தை திருமங்கலம் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, தகவலறிந்த காவல் கட்டுப்பாட்டு அறை உடனடியாகத் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் துறைக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியது. கட்டுப்பாட்டு அறையின் தகவலின் பேரில், திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று சீனிவாசன் ஓட்டி வந்த பேருந்தை மறித்து நிறுத்தினர்.
அப்போது பேருந்தை ஓரமாக நிறுத்துமாறு கூறிய போக்குவரத்து எஸ்.ஐ. தாச்சூஸ் என்பவருக்கும், ஓட்டுநர் சீனிவாசனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்திற்கு இடையே ஓட்டுநர் சீனிவாசன் மீண்டும் பேருந்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீசார், அவரைத் துரத்திச் சென்று திருப்பரங்குன்றம் கோயில் நிறுத்தம் அருகே மீண்டும் மடக்கிப் பிடித்தனர். பேருந்தில் என்ன நடக்கிறது என்று புரியாமல் பயணிகள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஓட்டுநர் மது அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், போக்குவரத்து எஸ்.ஐ. தாச்சூஸ் அவரைப் பரிசோதனை கருவியில் ஊதச் சொன்னபோது, “எனக்குக் குடிப் பழக்கமே கிடையாது” என்று ஓட்டுநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனால் ஓட்டுநருக்கும் எஸ்.ஐ. தாச்சூஸ்க்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் டிப்போ மேலாளர் முத்துமணி, காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். “ஓட்டுநர் சீனிவாசனுக்கு உடல் ரீதியாகப் பாதிப்பு உள்ளது. அதற்காக அவர் தொடர் மருந்து சாப்பிட்டு வருகிறார். உயர் அதிகாரிகள் பேருந்தை இயக்கக் கூடாது என்று கூறியதையும் மீறி அவர் பேருந்தை ஓட்டி வந்துள்ளார்” என்று மேலாளர் விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து, வேறொரு ஓட்டுநரை வரவழைத்து பேருந்தை இயக்கிச் செல்லுமாறு திருப்பரங்குன்றம் காவல்துறையினர் அறிவுறுத்தினர். போக்குவரத்து மேலாளர் முத்துமணி அளித்த விளக்கத்தின் பேரில், போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவர்களை அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், பேருந்தில் பயணித்த பயணிகள், “மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல் நடந்துகொள்பவரை பேருந்து ஓட்டுநராகப் பணியமர்த்தினால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?” எனப் புலம்பியபடியே அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒரே இரவில் இரண்டு அரசு பேருந்துகள் சர்ச்சையில் சிக்கியது.