விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். பேர்நாயக்கன்பட்டி ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,
புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் திருவேங்கடப்புரம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும், பார்வையிட்டு பயனாளிகளிடம் தமிழக அரசின் திட்டப்பணிகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
நதிக்குடி ஊராட்சியில், ரூபாய் 34 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஆணையாளர் லியாகத் அலி,வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, உதவிப் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
