மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருமங்கலம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிக்காக சோழவந்தான் ரோட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்ட வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த குடிநீர் மேம்பாட்டு பணிக்காக ரூபாய் 52.53 கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் ரோடு,ரதிராஜன் நகர், மதுரை ரோடு,கற்பகம் நகர் ஆகிய இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.
பின்னர் திருமங்கலம் நகராட்சி வார்டு 3, மம்சாபுரத்தில் உள்ள வீடுகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புளில் மீட்டர் பொருத்தப்பட்ட பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருமங்கலம் நகராட்சியில் முகமதுஷாபுரம் கிழக்கு 4ஆவது தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவினை ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பூங்காவில் பழுதடைந்துள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை சரி செய்யவும், செடி மரங்களை முறையாக தண்ணீர் ஊற்றி பராமரித்து, நாள்தோறும் பூங்காவினை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.உடற்பயிற்சி கூட உபகரணங்களுடன் பூங்காவினை மேம்படுத்தி முன்னோடியான பூங்காவாக உருவாக்க உத்தரவிட்டார். தொடர்ந்து TURIP 2025-26 திட்டத்தின் கீழ் திருமங்கலம் நகராட்சியில் முகமதுஷாபுரம் கிழக்கு 4-வது தெருவில் அமைக்கப்பட்ட தார் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையம் ரூபாய் 2.77 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம், நுழைவு வளைவு, மேற்கூரை, 7 கடைகள், அலுவலக அறை, பணியாளர் ஓய்வறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.
இந்த ஆய்வுகளின் போது திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் அசோக் குமார், நாகராட்சி பொறியாளர் இரத்தினவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.