நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற 12 ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா, தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் மருத்துவப் பரிசோதனை செய்த, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், இலவச சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தொடங்கி வைத்து பார்வையிடார்.
தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பொதுவாக தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைகள் செய்ய ரூ.15,000 வரை செலவாகிறது. ஆனால், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் மக்களை தேடிச் சென்று அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் கூட இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
இதனால், கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் பெரியளவில் பயனடைந்து வருகின்றனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாமின் போது பொதுமக்கள் எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இம்முகாமில் குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 11 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 12 ஆவது முறையாக வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளத்தில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், இம்முகாமில் மருத்துவப் பரிசோதனை செய்த, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், இலவச சக்கர நாற்காலிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெறுவதற்கு, மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து, அடையாள அட்டையை பெறுவதே வழக்கம். இது பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பெரும் சிரமமாக இருந்தது. ஆனால் இந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் நமது இருப்பிடத்திற்கு அருகிலேயே நடத்தப்பட்ட முகாம் மூலம் பரிசோதனை செய்து முடிவுகளை பெற்று, உடனடியாக அடையாள அட்டையோடு, இலவச சக்கர நாற்காலிகளையும் வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் இம்முகாம் மூலம் பயன்பெற்ற மாற்றுத்திறனாளிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், இன்று நடைபெற்ற இம்முகாம் மூலம் சுமார் 2500 க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெய்சிங், இணை இயக்குநர்(ஊரக நலப்பணிகள்) காளிராஜ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ், சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் ஜெகவீரபாண்டியன், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














; ?>)
; ?>)
; ?>)