


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி, நேற்று காலை மதுரை, திண்டுக்கல் தேசிய நான்கு வழிச் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இந்த நிலையில் உடனடியாக குடி நீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் ஒரு மணி நேரம் நடைபெற்ற பஸ் மறியல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் அலங்காநல்லூர் யூனியன் தனி அலுவலர் அய்யங் கோட்டை ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் நகரி கிராம மக்களுக்கு குடிதண்ணீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நகரியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பைப் மூலம் நகரி கிழக்குப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணியை செய்து வருகின்றனர். இது குறித்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது ஒரு தற்காலிக ஏற்பாடாக இல்லாமல் நிரந்தரமாக இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


