தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுகபைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

ஊழி காலத்திலும் அழியாத இத்தலம் கிருதயுகத்தில் பில்வனம் (வில்வம்) என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் (வன்னி) என்றும், துவாபரயுகத்தில் பிப்பலவனம் (அரசு) என்றும் கலியுகத்தில் வேத்ரவனம் (பிரம்பு) என்றும் திகழ்கிறது. இத்தல இறைவனை மூன்று கோடி மந்திர தேவதைகளும், பிரமன், எமன் முதலான தேவர்களும், துர்வாசர், அகத்தியர் முதலான முனிவர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
இத்தலத்தில் இறைவன் ஆணைக்கு இணங்க, நந்தியம்பெருமான் கொம்புகளால் உண்டாக்கப்பட்ட சிருங்கோத்பவ தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. துர்வாச முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தல அம்பிகை திருமாலாக காட்சியளித்ததாக வரலாறு. இங்கு காவிரி நதி உத்தரவாஹிநியாக (வடகாவேரியாக) பாய்ந்தோடும் பெருமை கொண்டது இத்தலம்.
மேலும் இங்கு அகத்திய முனிவரால் காவிரி மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கரையேற்று விநாயகர் அருள்பாலிக்கிறார். கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன்மாதேவியால் எழுப்பப்பட்ட முதற்கற்கோயில் இதுவாகும். இங்கு துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வடுக பைரவரை வழிபடுவோர் வறுமை நீங்கி, செல்வம் பெருகும், வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.