
மனிதரின் மூளைக்குள் சிப் பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்துவதை விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யவிருக்கிறார் எலான் மஸ்க்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் தான் இதனை மேற்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மனிதர்கள் மனதில் நினைப்பதை கணினி வழியாக வெளிப்படுத்த முடியும். இந்த சிப்பை தானே பொருத்திக் கொள்ளவும் எலான் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக எலான் மஸ்க், “நாங்கள் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இது தொடர்பான ஆய்வறிக்கைகளை எழுத்துபூர்வமாக சமர்ப்பித்து விட்டோம். இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூரோலிங்க் சோதனை தொடங்கும். நாங்கள் மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.